 மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கு 101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான உள்ளூராட்சி சபைத்தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
285வாக்களிப்பு நிலையங்களிலும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக நிறுவப்பட்டுள்ள 10 வாக்களிப்பு நிலையங்களிலும் நடைபெறவுள்ள இத்தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடையும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் 6 கட்சிகளும் 22 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுவதுடன் 101 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 831 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இதில் வாக்களிப்பதற்காக 2 இலட்சத்து 70 ஆயிரத்து 473 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர சபை,ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோறளைப்பற்று பிரதேச சபை,கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை, மண்முனை பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தென் மேற்கு பிரதேச சபை, போரதீவு பற்று பிரதேச சபை ஆகிய ஒன்பது சபைகளுக்கான தேர்தலே இன்று நடைபெறுகின்றது.
வாக்களிப்பு முடிவடைந்தவுடன் வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டுச்செல்லப்பட்டுவதுடன் தேர்தலின் முதலாவது முடிவை நள்ளிரவிற்கு முன்னர் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து சென்றுள்ள சுமார் ஐம்பதிற்கு மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
6 கட்சிகள், 22 சுயேச்சை குழுக்கள் போட்டி
தேர்தலில் போட்டியிடுகின்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்தும் ஏனைய நான்கு சபைகளில் தனித்தும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இதர எட்டு சபைகளில் தனித்தும்,ஈழவர் ஜனநாயக முன்னணி போரதீவு பற்று பிரதேச சபை தவிர்ந்த இதர எட்டு சபைகளிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும், தேசிய அபிவிருத்தி முன்னணி நான்கு இடங்களிலும், தேசிய காங்கிரஸ் ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.
இதேவேளை ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் புளொட் ஆகியன இணைந்து சகல சபைகளிலும் சுயேச்சையாக போட்டியிடுகின்றன. 4200 அதிகாரிகள் கடமையில் இத்தேர்தலில் வெளிமாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்ட அதிகாரிகள் அடங்கலாக 4200 அரசாங்க அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
26 வாக்கெண்ணும் நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்களுக்காக இணைந்த 10 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் கோறளைப்பற்று, ஏறாவூர்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளுக்கு தனியான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
6425 பொலிஸார் கடமையில்
தேர்தல் பாதுகாப்பிற்கென விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 6425 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குசாவடிகளுக்கும் தலா மூன்று பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் வீதிரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தலுக்கான பொலிஸ் பிரிவின் பிரதிபொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.
|